/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் ரோடு பணி தீவிரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் ரோடு பணி தீவிரம்
ADDED : மார் 27, 2025 07:22 AM

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் துாத்துக்குடி எல்லைப் பகுதியான கன்னிராஜபுரம் முதல் திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் வரை 120 கி.மீ.,க்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
2019ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தார் ரோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்தும் குண்டும் குழியுமாக மாறியது. நாள்தோறும் இச்சாலை வழியாக பல ஆயிரம் வாகனங்கள் பயணித்து வரும் நிலையில் சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து நேரிட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கன்னிராஜபுரம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை 120 கி.மீ.,க்கு ஏற்கனவே இருந்த சாலையின் மீது புதியதாக தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சாலை பணிகள் நிறைவிற்கு பிறகு பக்கவாட்டில் வெள்ளை கோடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டவாறு அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலை பணிகள் நடந்து வரும் வேளையில் திருப்புல்லாணி, கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளும் கட்டடங்களும் அதிகரித்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் ஒதுங்குவது கூட வழியில்லாத சூழல் உள்ளது.
சாலை தரமாக அமைக்கப்பட்டாலும் ஆக்கிரமிப்புகளால் பெரும் விபத்துக்கள் நேரிடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றனர்.