ADDED : ஜன 28, 2025 12:23 AM

ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சீலா மீன் சீசன் துவங்கியுள்ளதால் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்குகின்றன.
ஜன.,26ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் சீலா மீன்கள் அதிகமாக சிக்கின. மன்னார் கடலில் சிக்கும் சீலா மீன்களுக்கு ருசி அதிகம் என்பதால் இதனை கிலோ ரூ. 400 முதல் 500 வரை வியாபாரிகள் வாங்கினர். இதனை ஐஸ்சில் பதப்படுத்தி கோவை, சேலம், சென்னை, பெங்களூரு மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் அனுப்பினர்.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால் இனப்பெருக்கத்திற்கு மன்னார் வளைகுடா கடலுக்கு சீலா மீன்கள்  சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசன் மார்ச் வரை நீடிக்கும் எனவும், உரிய விலை கிடைத்ததாகவும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

