/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் காவிரி குடிநீரில் கழிவுநீர் கலந்து.. துர்நாற்றம்: பயன்படுத்த முடியல, நோய் தொற்று பீதியில் மக்கள்

ADDED : ஆக 26, 2025 03:29 AM

ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் ஜல்-ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் போது பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்து காவிரி கூட்டுக்குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது. துர்நாற்றத்தால் மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் நோய்த் தொற்று அச்சத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011ம் ஆண்டில் திருச்சி நங்கநல்லுார் காவிரியில் இருந்து 200 கி.மீ., குழாய் மூலம் ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
காவிரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல்நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகரில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜல்-ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் குடிநீர் வழங்க குழி தோண்டும் போது பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 2 நாள்களாக மக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பெயரளவில் குடிநீர் வழங்குவதால் மக்கள் குடிநீரை குடம் ரூ.13 வரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்தமான குடிநீர் தினமும் வழங்குவதை நகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு தொடர்பாக புகார் வந்துள்ளது. அவ்விடங்களில் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) பிரச்னைக்குரிய இடத்தை கண்டறிந்து சரிசெய்து, சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றார்.
---------------