/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை: காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
/
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை: காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை: காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை: காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : நவ 28, 2024 05:00 AM

மாவட்டத்தில் பரமக்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அனைத்து தாலுகா அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது.
தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குளிர் நிலவுவதாலும், தொடர்ந்து வெயில் தலைகாட்டாத நிலை உள்ளது. மேலும் மழைநீர் வடிகால் வசதிகள்இல்லாத நிலையில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் குட்டைகள், சாக்கடையுடன் கலந்துள்ளது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகிறது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 90 சதவீதம் பேருக்கு கை, கால் வலி பல நாட்கள் நீடிப்பதால் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் அங்கு டாக்டர்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
கமுதி, முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர்வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முதுகுளத்துார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர்.
பருவமழை காலம் என்பதால் கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இங்கு 10 டாக்டர்கள் பணி புரிய வேண்டிய நிலையில் தற்போது ஒருவர் மட்டும் பணியில் உள்ளார்.
இதனால் காலை முதல் மாலை வரை நோயாளிகள்காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலாக இருப்பதால் தொற்று நோய் பரவும்அபாயம் உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருவோர் முகம் சுளிக்கின்றனர்.
எனவே முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.