ADDED : ஜன 14, 2025 08:04 PM
தேவிபட்டினம்:
பொங்கல் விழாவை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெண்கள் அதிகாலை முதல் கோயில் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* பெருநாழி அருகே டி.வாலசுப்பிரமணியபுரத்தில் சித்தையா சுவாமி கோயில் 117 வது ஆண்டு குருபூஜை மற்றும் பொங்கல் விழா நடந்தது. விநாயகர் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கிராமத்தின் முக்கிய வீதியில் வழியாக கைலாய வாத்தியங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சிவன், நாகநாதர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கமுதி, பெருநாழி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.