ADDED : நவ 25, 2025 05:17 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பருவமழை கை கொடுத்ததால் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் 22 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் செப்.,ல் மானாவாரியாக பருவ மழையை எதிர்பார்த்து 22 ஆயிரம் ஹெக்டேரில் நெல் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்த பின்பு நிலவிய ஈரப்பதத்தில் நெற்பயிர்கள் முளைத்தன. ஆனால் நெற்பயிர்கள் முளைப்புக்கு பின் போதிய மழைப்பொழிவின்றி கடும் வறட்சி நிலவியதால் களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் மேற்கொண்ட நிலையில் நெற்பயிர்கள் வறட்சியால் கருகியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் நெல் வயல்களில் பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 22 ஆயிரம் ஹெக்டேர் நெல் விவசாயம் பாதிப்பில் இருந்து தப்பியது. இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீரை விவசாயிகள் தேக்கி வைத்து உரமிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை ஏமாற்றியதால் நெல் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்த விவசாயிகளுக்கு, தக்க சமயத்தில் கை கொடுத்த பருவமழையால் நெல் விவசாயப் பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

