/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்
/
தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை நபர் சிக்கினார்
ADDED : ஜூலை 11, 2025 02:12 AM

ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி 3ம் மணல் தீடையில் ஊடுருவிய இலங்கையைச் சேர்ந்தவரை மரைன் போலீசார் கைது செய்தனர்.
இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் கியோசன் 28. இவர் நேற்று காலை 9:30 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து 4 கி.மீ., துாரத்திலுள்ள 3ம் மணல் தீடையில் ஊடுருவி இருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் வந்தது. மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் படகில் தீடைக்கு சென்று கியோசனை மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர்.
பின் கியோசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தையுடன் அகதியாக வந்து வேலுார் வாலாஜாபேட்டை முகாமில் தங்கியதும், அங்கு போதிய வருவாய் இல்லாததால் இலங்கையில் உள்ள வீடு, சொத்துக்களை விற்க 2024 ஜூனில் விமானம் மூலம் இலங்கை சென்றதும், அங்கு சொத்துகளை விற்க முடியாததால் மீண்டும் கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இவர் மீது இலங்கையில் குற்ற வழக்கு ஏதேனும் உள்ளதா என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர். கியோசனை ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.