பரமக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை: தொடர் பணியால் அவதி
பரமக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை: தொடர் பணியால் அவதி
UPDATED : மே 23, 2026 08:22 PM
ADDED : மே 23, 2026 08:11 PM

பரமக்குடி: பரமக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடக்கும் தொடர் பணியால் அவதிக்குள்ளாகின்றனர்.
பரமக்குடி நகராட்சி காட்டுபரமக்குடி 110 கே.வி., துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம், சத்திரக்குடி, நயினார்கோவில், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில் ஏராளமான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப டிரான்ஸ்பார்மர்களும் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன.
இச்சூழலில் மின்வாரியத்தில் அனைத்து வகையான ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபர் மின் இணைப்பு வழங்குவதில் துவங்கி, புதிய மின்கம்பங்கள் நடுவது என பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பேரிடர் காலங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் ஊழியர்கள் சிரமப்பட்டு பணிபுரியும் நிலை உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களாக பரமக்குடி பகுதியில் பெய்த கன மழையால் ஆங்காங்கே மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்களின் கடும் போராட்டத்திற்கு இடையே அக்னி வெயிலிலும் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருபுறம் மின்தடையால் வியாபாரிகள், மக்கள் பாதிக்கும் நிலை அதிகரித்துள்ளது.
எனவே மின்வாரியத்தில் தகுந்த பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
