/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடையை மீறினால் மானிய டீசல் 'கட்'
/
தடையை மீறினால் மானிய டீசல் 'கட்'
ADDED : டிச 21, 2024 07:19 AM
தொண்டி : புயல் காலங்களில் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றால் படகுகளை பறிமுதல் செய்வதோடு மானிய டீசல் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் பிரபாவதி எச்சரித்தார்.
நவ.20 ல் வானிலை ஆய்வு மையம் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக அறிவித்தது. தொண்டி மீன்வளத்துறையினர் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால் தடையை மீறி நவ.24 ல் நம்புதாளை மற்றும் பாசிபட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன்வளத்துறையினர் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் டீசல் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மீனவர்கள் ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு மீன்வளத்துறை இணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாகிர், கடலோர காவல் குழும எஸ்.ஐ., குருநாதன் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
இணை இயக்குநர் பிரபாவதி பேசுகையில், புயல் காலங்களில் தடையை மீறி மீனவர்கள் கடலுக்குள் சென்றால் படகை பறிமுதல் செய்வதோடு மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் வரும் காலங்களில் தடையை மீறி கடலுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்க முடிவு செய்யப்பட்டது.