/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதார் மைய கட்டடம் கட்ட ஆதரவும், எதிர்ப்பும்
/
ஆதார் மைய கட்டடம் கட்ட ஆதரவும், எதிர்ப்பும்
ADDED : டிச 10, 2025 08:48 AM

தொண்டி: தொண்டி பாவோடி மைதானம் அருகே ஆதார் சேவை மைய கட்டடம் கட்ட இரு தரப்பினரிடையே ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டு ஏராளமானோர் திரண்டனர்.
தொண்டி பாவோடி மைதானம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட ஆதார் சேவை மைய கட்டடம் இருந்தது. மிகவும் சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்ட தொண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பழைய கட்டடம் இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கிய போது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அந்த இடத்தில் கட்டடம் கட்டக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. அதே இடத்தில் ஆதார் சேவை மையம் கட்டவேண்டும் என்றும், அந்த இடத்தில் கட்டக்கூடாது என்றும் இரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அப்போது ஏராளமானோர் திரண்டு சென்று கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதட்ட நிலை ஏற்பட்டதால் தாசில்தார் ஆண்டி, தொண்டி போலீசார் பேச்சுநடத்தினர். இதில் முடிவு ஏற்படாததால் மற்றொரு நாளில் சமாதான கூட்டம் நடத்தி அதில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதுவரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

