ADDED : ஏப் 12, 2025 05:57 AM
திருவாடானை, : புளியம்பழம் சீசன் துவங்கியுள்ளதால் மரங்களில் பழம் பறிக்கும் பணி நடக்கும் நிலையில் ஓராண்டுக்கு தேவையாதை வாங்கி மக்கள் இருப்பு வைக்கத் துவங்கினர்.
திருவாடானை தாலுகாவில் பல ஆயிரம் புளிய மரங்கள் உள்ளன. நவ., டிச., மாதங்களில் பிஞ்சு காய்த்து, மார்ச் முதல் மே வரை புளியம்பழத்திற்கான சீசன். கிராம மக்கள் புளியம்பழம் விற்பனை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சூச்சனி கிராம மக்கள் கூறுகையில், இந்த ஆண்டு புளியம்பழம் அமோகம். மரங்களில் பழங்களை பறித்து ஓடுகளை அகற்றி வெயிலில் காயவைத்து கிலோ ரூ.100 வரை விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்குகிறார்கள். வரத்து அதிகமாக உள்ளதால் புளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.
கோடையில் கிடைக்கும் புளியம்பழங்களை வாங்கி மக்கள் இருப்பு வைப்பது வழக்கம். சீசன் துவங்கியதை அடுத்து விலை குறைந்துள்ளதால் மக்கள் ஓராண்டுக்கு தேவையான பழங்களை வாங்கி வீடுகளில் இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர்.

