/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீமைக்கருவேலம் அகற்றி துார்வார வேண்டும் ; மண் மேவியது ராமநாதபுரம் பெரிய கண்மாய்
/
சீமைக்கருவேலம் அகற்றி துார்வார வேண்டும் ; மண் மேவியது ராமநாதபுரம் பெரிய கண்மாய்
சீமைக்கருவேலம் அகற்றி துார்வார வேண்டும் ; மண் மேவியது ராமநாதபுரம் பெரிய கண்மாய்
சீமைக்கருவேலம் அகற்றி துார்வார வேண்டும் ; மண் மேவியது ராமநாதபுரம் பெரிய கண்மாய்
ADDED : மார் 23, 2025 04:03 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் மேடாகி சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை துார் வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ராமநாதபுரம் பெரிய கண்மாயும் ஒன்று. 12 கி.மீ., நீளத்தில் 200 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. பெரிய கண்மாய் பகுதியில் 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும்.
தற்போது கண்மாய் பகுதியில் மணல் மேவி மேடாகியுள்ளது. நீர் பிடிப்பு பகுதி மிகவும் குறைந்து விட்டது. கண்மாய் துார் வாரப்படாமல் இருப்பதாலும், வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு செய்யாததால் கண்மாய்க்கு வரும் நீர் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்மாயை நம்பி 3968.65 ஏக்கர் சாகுபடி நிலங்கள் இருந்தது. கண்மாய் பாசனப்பகுதியில் பெரும்பகுதிகள் பிளாட்டுகளாக மாறி வருகிறது. பாப்பாகுடி, தொருவளூர், கவரங்குளம், களத்தாவூர், குமரியேந்தல், முதுநாள், இடையர்வலசை, சூரன்கோட்டை, நொச்சிவயல், அச்சுந்தன்வயல், சித்துார், லாந்தை, ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் கண்மாய் நீரில் நெல் சாகுபடி செய்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் பெரிய கண்மாய் உள்ளது. கூரியூர், புத்தேந்தல், களத்தாவூர் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. ராமநாதபுரம் நகரில் உள்ள நீலகண்டி ஊருணி, முகவையூருணி, நொச்சியூருணி, கிடாவெட்டியூருணி, பேராவூர் கண்மாய், குண்டூருணி, செட்டியூருணி, அல்லிக்கண்மாய் ஊருணி உள்ளிட்ட ஊருணிகளின் நீர் ஆதாரமாக உள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயை துார் வாரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த மழை சீசன் துவங்குவதற்குள் துார் வார பொதுப்பணித்துறையினரும், தமிழக அரசும் முன் வர வேண்டும். --