/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறிச்சோடிய மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப்பணிகள் ஏமாற்றம் துார்வாரப்படாத கூத்தன் கால்வாய்
/
வெறிச்சோடிய மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப்பணிகள் ஏமாற்றம் துார்வாரப்படாத கூத்தன் கால்வாய்
வெறிச்சோடிய மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப்பணிகள் ஏமாற்றம் துார்வாரப்படாத கூத்தன் கால்வாய்
வெறிச்சோடிய மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாப்பணிகள் ஏமாற்றம் துார்வாரப்படாத கூத்தன் கால்வாய்
ADDED : நவ 09, 2025 06:03 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே கூத்தன் கால்வாய் துார்வாரப்படாத நிலையில் மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் நீர்வரத்தின்றி வெறிச்சோடியதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைக்கின்றனர்.
மேலச்செல்வனுார் மற்றும் கீழச்செல்வனுார் ஆகிய இரண்டு கண்மாய்களும் பறவைகள் சரணாலயத்திற்கு உரிய கண்மாயாக 1992ல் அறிவிக்கப்பட்டு 1998ல் அதிகாரப்பூர்வமான சரணாலயமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் மேலச்செல்வனுாரில் உள்ள நாட்டு கருவேல மரங்களில் வெளிநாட்டு பறவைகள் இரை தேடிய பின் தங்களுக்கான கூடுகளை அமைத்துக் கொண்டு பின் முட்டையிட்டு குறிப்பிட்ட மாத இடைவெளியில் மீண்டும் குஞ்சுகளை அழைத்துச் செல்கின்றன.
நடப்பு ஆண்டில் தீபாவளியை ஒட்டி பெய்த மழைக்குப் பிறகு மழை பெய்யாத நிலையில் கண்மாய் நிரம்பாமல் புல்தரையின் மேடுகளாக தெரிகிறது. இதனால் மேய்ச்சல் நிலமாக இருப்பதால் செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது;
கூழைக்கிடா,செங்கால் நாரை, நத்தைகொத்தி நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் வாலிநோக்கம் கழிமுகத் துவாரத்தில் இரை தேடிவிட்டு மேலச்செல்வனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கியுள்ள நீர் நிலைகளிலும் சென்று விட்டு மீண்டும் பறவைகள் சரணாலயத்தில் வருவது வாடிக்கை.
பெருவாரியான நாட்டு கருவேல மரங்களை கூடுகள் அமைக்க பயன்படுத்துகின்றன. தற்போது கண்மாயில் நீர் வரத்தின்றி மைதானம் போல உள்ளது. 1800 ஹெக்டேர் கொண்ட மேலச்செல்வனுார் மற்றும் கீழச்செல்வனுார் கண்மாய்க்கு வரக்கூடிய வரத்துக்கால்வாய் துார்ந்து போய் உள்ளது.
முதுகுளத்துார் அருகே காக்கூர் பகுதியில் இருந்து வரக்கூடிய வழித்தடத்தின் இரு புறங்களிலும் முறையாக துார்வாரப்படாததே இதற்கு காரணம். நீர் வழித்தடம் உள்ள கூத்தன் கால்வாயை 10 கி.மீ., க்கு துார்வாரினால் மழை காலங்களில் உபரியான வெள்ள நீரை இங்கு சேகரிப்பதற்கு வசதியாக இருக்கும்.
சரணாலய பகுதிகளில் தண்ணீர் இன்றி இருப்பதால் பெருவாரியான பறவைகள் தங்களுக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளாமல் உள்ளது. அவற்றின் வருகையும் மிகவும் குறைவாக உள்ளது. மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே இருந்து பைனாக்குலர் மூலமாகவும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பறவைகள் காணப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். உரிய பருவமழை மற்றும் வரத்துக்கால்வாய் வழித்தட நீருக்காக மேலச்செல்வனுார் கண்மாய் காத்திருக்கிறது என்பதே உண்மை நிலை என்றனர்.

