/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்கு மரங்கள் சாய்ந்தன, வீடுகள் சேதம்
/
மழைக்கு மரங்கள் சாய்ந்தன, வீடுகள் சேதம்
ADDED : டிச 01, 2025 06:53 AM

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. வயலில் களை எடுத்த மூதாட்டி மயக்க மடைந்து இறந்தார்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரு நாட்களாக திருவாடானை, தொண்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் திருவாரூர் மாவட்டம் திருத்தரைபூண்டி தாலுகாவை சேர்ந்தவர் பார்வதி 65. இவர் திருவாடானை அருகே தேளூர் கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் அதே இடத்தில் இறந்தார்.
தொண்டி அருகே எம்.வி.பட்டினத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது.
அதே போல் நம்புதாளையில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கபட்டனர். ஏழுர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், ஆதியூர் காரங்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி, திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் சத்யா. இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வருவாய்த்துறையினர் சென்று பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கினர். கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து நம்புதாளை செல்லும் வழியில் உள்ள பழமையான வேப்ப மரமும், தொண்டி பாவோடி மைதானத்தில் உள்ள புங்க மரமும் பலத்த காற்றில் சாய்ந்தது. தொழிலாளர்கள் மரங்களை அகற்றினர்.

