/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும்
/
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும்
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும்
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும்
ADDED : ஏப் 22, 2025 05:49 AM
ராமநாதபுரம்: நீர் இருப்பை பொறுத்து தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என வைகை பூர்வீக பாசன பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வைகை அணையில் இருந்து பாசன பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நீர் பங்கீடு செய்யப்படுகிறது. முதல் பகுதி திண்டுக்கல் மாவட்டம் பேரணையில் இருந்து மதுரை மாவட்டம் விரகனுார் தடுப்பணை வரை 46 கண்மாய்கள் மூலம் 27 ஆயிரத்து 528 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இரண்டாம் பகுதியில் விரகனுார் முதல் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகு அணை வரை 87 கண்மாய்கள் மூலம் 40 ஆயிரத்து 742 ஏக்கர் நிலங்களும், மூன்றாம் பகுதியில் பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரையுள்ள பகுதியில் 241 கண்மாய்கள் மூலம் 67 ஆயிரத்து 837 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 374 கண்மாய்கள் மூலம் 11,634.66 மில்லியன் கன அடி நீரால் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 98 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதில் முதல் பகுதிக்கு வைகை அணையில் இருந்து கிடைக்கும் நீரில் 2 பங்கு நீரும், இரண்டாம் பகுதிக்கு 3 பங்கு நீரும், 3ம் பகுதிக்கு ஏழு பங்கு நீரும் வழங்கப்பட வேண்டும்.
ஆண்டு தோறும் வைகை அணையில் இருந்து நீர் திறப்பதற்கு என தனியாக அரசாணை இல்லை. காவிரி பாசன பகுதியில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆண்டு தோறும் ஜூன் 2 ல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதே போல் வைகை அணையில் 1354 மில்லியன் கன அடி எட்டும் போது வைகை பாசன பகுதிகளுக்கு நீர் திறக்கப்படுகிறது. கடை மடைப்பகுதியான ராமநாதபுரத்திற்கு முன்னுரிமை வழங்கி நீர் திறக்கப்பட வேண்டும். தண்ணீர் இருப்பை காரணம் காட்டி ராமநாதபுரம் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: வைகை அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் செப்., இறுதி வாரத்தில் திறக்கப்படும் என நிரந்தர அரசாணையை அரசு வெளியிட வேண்டும்.
செப்., க்குப்பின் அக்., நவ., வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் மழையால் கிடைக்கும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் எளிதில் பயிர்களை விளைவிக்க முடியும்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.