ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் குழாய்களில் வெறும் காற்றுதான் வருகிறது. குடிநீர் பாட்டில்களை விலைக்கு வாங்கி பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி மதுரைக்கும், திருச்சிக்கும், சென்னைக்கு இரு ரயில்களும், கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்களும், கோவைக்கு வாரத்தில் ஒரு நாளும், வராந்திர ரயில்களான ஓகா, ஹூப்ளி ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் வரும் பயணிகள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் குழாய்களை திறந்து பார்த்தால் வெறும் காற்றுதான் வருகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
மேலும் ரயில் குறைவான நேரமே நிறுத்தப்படுவதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். முதலாவது நடைமேடையில் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அருகில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
அதுவும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பயன்படாத நிலையில் தான் உள்ளது. கடைகளில் குடிநீர் பாட்டில்களை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து குழாய்களிலும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
மேலும் கழிப்பறை வசதிகளும் போதுமான அளவில் இல்லை. எனவே தேவையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.