/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் கலுங்கில் வீணான தண்ணீர்
/
கண்மாய் கலுங்கில் வீணான தண்ணீர்
ADDED : ஜன 01, 2025 08:02 AM

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாய் கலுங்கு சேதமடைந்துள்ளதால் தற்போது பெய்த மழையால் ஏற்பட்ட நீர் வரத்தை தேக்க முடியாமல் வீணாக வெளியேறுகிறது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பொதுபணித்துறை கண்மாய் உள்ளது. இதில் தேக்கபடும் நீரால் 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2018ல் குடிமராமத்து செய்யப்பட்டது.
கண்மாயில் நீர் தேங்கும் வகையில் இரண்டு கலுங்குகள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள கலுங்கு சேதமடைந்து தற்போது பெய்த மழை நீர் வெளியேறுகிறது.
திருவெற்றியூர் விவசாயிகள் கூறியதாவது: குடிமராமத்து பணியின் போது மேற்கு பகுதியில் கலுங்கு நன்றாக சீரமைக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பகுதியில் உள்ள கலுங்கை முறையாக சீரமைக்கவில்லை.
இதனால் கலுங்கு சேதமடைந்து மழை நீர் வெளியேறுகிறது. நாளுக்கு நாள் விரிசல் ஏற்படுவதால் இன்னும் சில நாட்களில் முற்றிலும் சேதமடைந்து கண்மாய் நீர் முழுமையாக வெளியேற வாய்ப்பு உள்ளது.
மேலும் கலுங்கு வழியாக வெளியேறும் நீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்து 200 ஏக்கர் நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. பெரும் பாதிப்பு ஏற்படும் முன்பு கலுங்கை சீரமைத்து கண்மாயில் தண்ணீர் தேக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

