ADDED : செப் 22, 2026 02:09 AM

முதுகுளத்துார்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியத்தில் காவிரி குடிநீர் வந்தும் பல இடங்களில் குழாய் உடைந்து வீணாவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக முதுகுளத்துாரில் பல இடங்களில் அடிக்கடி காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவது தொடர்கிறது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15க்கு வாங்க காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட முதுகுளத்துார்--கமுதி ரோடு, முதுகுளத்துார் --ராமநாதபுரம் ரோடு, முதுகுளத்துார்--கடலாடி ரோட்டோரங்களில் பல இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
பல ஆயிரம் லிட்டர் குடிநீர் எந்த பயன்பாடும் இன்றி ரோட்டோரத்தில் விவசாய நிலத்தில் தேங்குகிறது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஒருபுறம் பல கிராமங்களில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதற்காக டிராக்டருக்காக நாள் முழுவதும் காத்திருக்கின்றனர். இது குறித்து சண்முகவள்ளி கூறியதாவது:
முதுகுளத்துார் வட்டாரத்திற்குட்பட்ட பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது தொடர்கிறது. ஒருபுறம் குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துவதற்காக காத்திருக்கின்றனர். இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பல இடங்களில் காவிரி குழாய் உடைப்பு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு புறம் சரி செய்தால் அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. குழாய் உடைப்பு ஏற்படாமல் இருந்தால் பல கிராமங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும்.
மாவட்ட அதிகாரிகள் முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிரந்தரமாக குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க சரி செய்தும், கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முதுகுளத்துார் வட்டாரத்தில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாவது ஒரு புறமும், குடிநீருக்காக தவம் கிடந்து காத்திருக்கும் அவல நிலை ஒருபுறமும் தொடர்கிறது.
இந்த அவல நிலை மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகாக்களிலும் தொடர்கிறது. புதிதாக அமைந்த த.வெ.க., அரசு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
