/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
50 ஏக்கரில் கரும்பு பயிரை அழித்த காட்டுப்பன்றிகள்
/
50 ஏக்கரில் கரும்பு பயிரை அழித்த காட்டுப்பன்றிகள்
ADDED : டிச 15, 2024 09:00 AM

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புத்துருத்தி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 50 ஏக்கரில் விளைந்த கரும்பு பயிரை காட்டுப்பன்றிகள் அழித்தன.
கமுதி அருகே காக்குடி, புத்துருத்தி, வல்லக்குளம் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கரும்பு, கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.
காக்குடி குரூப் புத்துருத்தி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு விவசாயம் செய்துள்ளனர். தற்போது கரும்பு நன்கு விளைச்சல் அடைந்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அழிக்கின்றன. புத்துருத்தி பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கமுதி அருகே கிராமங்களில் கரும்பு விவசாயம் செய்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லையால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் சிலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
இப்பகுதியில் கரும்பு பயிர்கள் விளைந்த நிலையில் தற்போது 50 ஏக்கரில் கரும்புகளை காட்டுப்பன்றிகள் அழித்துள்ளன. இதனால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.