
l நலிவடையும் வெற்றிலை விவசாயிகள் ஏக்கம்
l பெரியபட்டினம், முத்துப்பேட்டை செழிக்குமா
பெரியபட்டினம் மற்றும் முத்துப்பேட்டை மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. தோப்புகள் அருகே உள்ள நிலங்களில் வெற்றிலை கொடிக்கால் நடப்பட்டு அவற்றிற்கு ஊடுபயிராக அகத்திக்கீரை மரங்கள் அதிகளவு நடப்பட்டுள்ளன.
அகத்தி மரத்தின் பக்கவாட்டுக் கிளைகளை பிரதானமாகக் கொண்டு வெற்றிலை கொடிகள் படர்ந்து வெற்றிலை சாகுபடி நடக்கிறது. முத்துப்பேட்டை வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:
வெற்றிலை விவசாயத்திற்கு பாய்ச்சக்கூடிய நீர் நல்ல தண்ணீராக இருக்க வேண்டும். உவர்ப்பு நீரில் வளராது. கடற்கரையை ஒட்டிய பகுதியாக இருந்தாலும் இப்பகுதியில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வெற்றிலை கொடி விவசாயம் இப்பகுதியில் செழித்து வந்தது.
தற்போது குறைந்த அளவில் தான் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வெற்றிலை கொடிகளுக்கு பராமரிப்பு செலவு அதிகம் ஆகிறது. உழைப்பு அதிகமாக உள்ள நிலையில் கூலி குறைவாகவே உள்ளது.
இயற்கை உரத்தில் தான் விளைவிக்கப்படுகிறது. தற்போது பெருமளவில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடியில் ஆர்வம் இல்லாமல் பெரும்பாலும் அவற்றை விட்டு வேறு விவசாயம் செய்கின்றனர்.
எனவே நலிவடையும் நிலையில் உள்ள வெற்றிலை கொடி விவசாயத்திற்கு அரசு உரிய முறையில் பயிற்சி அளிக்கவும் அவற்றிற்கான மானிய இடுபொருள் மற்றும் உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்தால் இத்தொழில் முன்பு போல் நன்றாக செழிக்கும்.
வேளாண்மை மற்றும் மலைப் பயிர்கள் துறையினர் வெற்றிலை சாகுபடிக்கான உரிய ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.