/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொன்னாங்கழிக்கானல் நீரோடை பராமரிக்கப்படுமா
/
பொன்னாங்கழிக்கானல் நீரோடை பராமரிக்கப்படுமா
ADDED : ஜூலை 18, 2025 11:46 PM

திருப்புல்லாணி: - திருப்புல்லாணி ஊராட்சியில் கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த பொன்னாங்கழிக்கானல் நீரோடையை பராமரிக்க வேண்டும்.
கடந்த 2015ம் ஆண்டு ரூ.22 லட்சத்தில் பொன்னாங்கழிக்கானல் நீரோடை புதிதாக துார்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டன. அதன் பின் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பின்றி பொன்னாங்கழிக்கானல் நீரோடையின் பக்கவாட்டு கரைப்பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
சிறு தடுப்பணையின் அருகே சம்பை நாணல் புற்கள் மிகுதியாக வளர்ந்துள்ளதால் அப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பக்தர்கள் கூறியதாவது :
பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பொன்னாங்கழிக்கானல் நீரோடையில் முன்பு திருப்புல்லாணிக்கு மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் நீராடிய புனிதமான நீரோடையாகும். இதன் மகத்துவம் அறிந்து கடந்த 2015ம் ஆண்டு புதியதாக நிதி ஒதுக்கப்பட்டு துார்வாரப்பட்டது.
மழைக்காலங்களில் அப்பகுதியில் நீர் நிரம்பி காணப்படும். இதன் வழியாக பயணிக்க கூடிய ஐயப்ப, முருக பக்தர்கள் இங்குள்ள படித்துறையில் நீராடி விட்டு செல்வார்கள். தற்போது முறையான பராமரிப்பின்றி பாசி படர்ந்தும் புற்கள் மிகுதியாக வளர்ந்தும் காணப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக நிதி ஒதுக்கீடு செய்து பொன்னாங்கழிக்கானல் நீரோடையை துார்வார வேண்டும். மழைக்காலத்திற்கு முன் இப்பணிகளை செய்தால் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர்.