/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த மீனவ குடும்பங்கள்: கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
/
இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த மீனவ குடும்பங்கள்: கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த மீனவ குடும்பங்கள்: கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த மீனவ குடும்பங்கள்: கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை
ADDED : நவ 07, 2025 11:18 PM

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மீனவர்கள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் தலைமையில் நடந்தது. மீனவர் நலத்துறையில் வலைப்பின்னல், கடற்பாசி வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்ற மீனவ குடும்ப பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தனுஷ்கோடி பகுதியில் காற்றாலை திட்டம் கொண்டு வருவதால் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் பாதிக்கப்படும். அந்த திட்டம் குறித்து அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்கவில்லை.
அதே போல் உள்துறை அமைச்சகம் அணு ஆயுதம் சம்பந்தமான கனிம வளத்தை எடுப்பதற்கு கருத்து கேட்க வேண்டாம் என தெரிவித்தது.
ஆனால் வனத்துறை எல்லா கனிமவளத்திற்கும் அனுமதி கேட்க தேவையில்லை என தெரிவித்துள்ளனர். மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
காரைக்கால் மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க வருவதை தடுக்க வேண்டும் என்றனர். இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் கூறியதாவது:
கடந்த ஆக., மாதம் கடலுக்கு சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதல் முறை பிடிபட்டவர்கள் தான். இரண்டாம் முறை பிடிபட்டவர்களுக்கு கூட இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதமாக அவர்களிடம் அலைபேசியில் கூட பேசவில்லை.
மீன்பிடிப்பதை மட்டும் தான் தொழிலாக நம்பியுள்ளதால் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ளோம். வரும் புத்தாண்டுக்குள் அவர்கள் வீடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கலெக்டர் கூறியதாவது: இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் கடன் பெற்றிருந்தால் அதற்கான நிலுவை காலத்தை நீட்டிக்க அறிவுறுத்தப்படும்.
மீனவர்கள் தங்கள் படகுகளின் பதிவு எண்ணை தெளிவாக தெரியும் படி பதிவு செய்ய வேண்டும். கடலுக்கு செல்லும் முன்பு டோக்கன் பெற்றுவிட்டு செல்லவும். டீசல் மானியம் பெறுவதற்கு சிறப்பு சலுகை வழங்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர்கள் சிவகுமார், ஜெயக்குமார், தமிழ்மாறன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

