ADDED : ஆக 23, 2026 11:24 PM
தொண்டி: தொண்டி மகளிர் கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறை தேவை என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. தொண்டியில் 2023-24ம் கல்வியாண்டில் அழகப்பா பல்கலை சார்பில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. அப்பகுதி ஏழை மாணவிகளின் உயர்கல்விக்காக அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இக்கல்லுாரியில் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு தேவையான போதிய வகுப்பறை வசதிகள் இல்லை.
இட நெருக்கடியால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதை வலியுறுத்தி தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கத் தலைவர் சுலைமான், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் அருள்சாமி மற்றும் நிர்வாகிகள் காரைக்குடியில் உள்ள துணைவேந்தரை நேரில் சந்தித்தனர். மாணவிகளின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறைகள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
