ADDED : நவ 08, 2024 02:43 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ராஜ்குமார், 47. இவரது மனைவி பூங்கொடி, 43; இவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வேடல் - காந்தி நகர் இடையே சென்றபோது, எதிரே வந்த ஒரு கார், ராஜ்குமார் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது. இதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. எதிரே காரில் வந்தவர்கள், வேடல் பகுதியில் தங்கள் ஆதரவாளர்களை வரவழைத்து தாக்கியதில், சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார். படுகாயமடைந்த பூங்கொடி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராஜ்குமாரை கொலை செய்தவர்களை, கைது செய்யக்கோரி, அவரது ஆதரவாளர்கள் அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் பாராஞ்சி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் போலீசார் சமாதானப்படுத்தி, விசாரித்து வருகின்றனர்.