ADDED : பிப் 09, 2025 12:35 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு கிழக்கில், சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
பெரிய மலையில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது. இந்நிலையில், கூடுதலாக, ரோப்கார் வசதி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரம் பக்தர்கள் வரை ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. பிரம்ம தீர்த்தம் என்படும் தக்கான் குளம், கொண்டபாளையம் கூட்டு சாலையில் உள்ளது.
தக்கான் குளத்தில், தை மாதம் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. மூன்று நாள் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், பக்தோசித பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றும், நாளையும் தெப்ப உற்சவம் நடைபெறும்.