/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தி.மு.க.,வை அகற்றும் காலம் வந்துவிட்டது: அன்புமணி
/
தி.மு.க.,வை அகற்றும் காலம் வந்துவிட்டது: அன்புமணி
UPDATED : ஜூன் 17, 2025 07:07 AM
ADDED : ஜூன் 17, 2025 02:16 AM

ராணிப்பேட்டை, 'தி.மு.க.,வை அகற்றும் காலம் வந்து விட்டது. அதற்கான கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். வரும் காலம் நம்முடைய காலம்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
ராணிப்பேட்டையில் நேற்று நடந்த ஒருங்கிணைந்த, பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், என்ற அடிப்படையில் கட்சி தொடங்கி, 36 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆளும் கட்சியாக மாறவில்லை. நமக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும், அடுத்த கட்டத்திற்கு செல்ல, மக்கள் நம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து, தி.மு.க.,வினர் பயந்து விட்டனர்.
கட்சி நிறுவனர் ராமதாஸ், நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார். அவரது கொள்கையை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். கட்சி வேகமாக வளர வேண்டும். அதற்கு ஆட்சி, அதிகாரம் வேண்டும். நாமும் ஆள வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்கள், படிப்பு, வேலை வாய்ப்பு கொடுங்கள் என சித்திரை முழு நிலவு மாநாட்டில் முன் வைத்தது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி, பின்தங்கிய கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதியை நிலை நாட்ட வேண்டி வலியுறுத்தப்பட்டது.
வரும் ஜூலை, 25ம் தேதி ராமதாஸ் பிறந்த நாளில், தமிழக மக்களின் உரிமை மீட்பு நடை பயணமாக மேற்கொள்ள உள்ளேன். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞருக்கு பாதுகாப்பு இல்லை. ஓடுகின்ற வண்டியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான். இது என்ன கலாசாரம். இதற்கெல்லாம் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க., செய்யும் ஊழல், கொடுமை, கொடூரங்களை எடுத்துக்காட்டத்தான் இந்த நடைபயணம். அதே நேரத்தில் நம்முடைய, 10 உரிமைகள் மீட்டெடுக்க இந்த நடைபயணம். சமூக நீதி, மகளிருக்கு வன்முறையில்லா வாழ்வு, போதை கலாசாரம் அகற்றுதல், வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, அடிப்படை உரிமை, இலவச கல்வி, தரமான இலவச மருத்துவம், நகர்ப்புற வளர்ச்சி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உரிமையை வலியுறுத்தி, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. தி.மு.க.,வை அகற்றும் காலம் வந்து விட்டது.
அதற்கான கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். வரும் காலம் நம்முடைய காலம்.
இவ்வாறு, அவர் பேசினார்.