/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
திருவாலங்காடை தொடர்ந்து அரக்கோணம், அம்பத்துாரில் பீதி :ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி
/
திருவாலங்காடை தொடர்ந்து அரக்கோணம், அம்பத்துாரில் பீதி :ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி
திருவாலங்காடை தொடர்ந்து அரக்கோணம், அம்பத்துாரில் பீதி :ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி
திருவாலங்காடை தொடர்ந்து அரக்கோணம், அம்பத்துாரில் பீதி :ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி
ADDED : ஏப் 28, 2025 01:44 AM

அரக்கோணம்:திருவாலங்காடு அருகே நட்டு, போல்ட் கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், அம்பத்துார், அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்திருந்ததால், மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா என, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே, கடந்த 25ம் தேதி, தண்டவாளத்தில், 'நட்டு, போல்டு'களை மர்ம நபர்கள் கழற்றி, ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க திட்டமிட்டனர். ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்து, அந்த விபத்தை முறியடித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள தனிப்படை போலீசார், திருவாலங்காடு சுற்றியுள்ள கிராமங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினம் இதுபோன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில், தண்டவாளங்களில் நேற்று மாலை, கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. அரக்கோணம் ரயில்வே போலீசார், மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர். கற்கள் மற்றும் கம்பிகளை அகற்றினர்.
மற்றொரு சம்பவம்
திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில், அம்பத்துார் - பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சிக்னல் பழுதானதாக, நேற்று முன்தினம் நள்ளரவில், பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிக்னல் அருகே உள்ள தண்டவாளங்களை மாற்றும் இடத்தில், அதை இயக்க முடியாத வகையில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கற்களை அகற்றிவிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
நள்ளிரவு நேரம் என்பதாலும், சிக்னலில் ஏற்பட்ட பழுதை உடனடியாக கண்டறிந்ததாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.
ரயில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சதி செயல்கள் நடந்ததா என்ற கோணத்தில், ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

