/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற உத்தரவு
/
கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற உத்தரவு
ADDED : செப் 05, 2024 03:05 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த, 30ல் நடந்தது. அதில், 'சேலம் மாநகராட்சி, கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி வருகிறது.
இதனால் ஆற்றை சார்ந்த வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, காகாபாளையம், மல்லசமுத்திரம் பகுதி விளைநிலங்களில் உப்புத்தன்மை அதிகமாகி மண்வளம் அழிந்து சோளம், தென்னை தவிர இதர பயிர்கள் செய்ய முடியவில்லை' என, குப்பனுார் விவசாயி செல்வராஜ் குற்றம்சாட்டினார்.
அதனால் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டலம் வெள்ளைக்குட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதபடி சுத்திகரித்து வெளியேற்றவும், சுத்திகரித்த நீரை எந்த தடையின்றி எளிதாக வெளியேற்றவும், தேவையான நீர்வழிப்பாதைகளை துார்வாரும் பணியை முறையாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டு நெறிமுறைப்படி சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க அறிவுறுத்தினார்.