/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய சிறையில் கைதி சாவுமாஜிஸ்திரேட் விசாரணை
/
மத்திய சிறையில் கைதி சாவுமாஜிஸ்திரேட் விசாரணை
ADDED : பிப் 13, 2025 01:07 AM
மத்திய சிறையில் கைதி சாவுமாஜிஸ்திரேட் விசாரணை
சேலம்:சேலம் மத்திய சிறையில் கைதி இறந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட், 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மஞ்சக்கல்பட்டியை சேர்ந்த சாராய வியாபாரி தெய்வ சிகாமணி, 51. இவர் கடந்த, 8ல் வீடு அருகே, அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்றதால், சங்ககிரி போலீசார் கைது செய்து, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். பின் மருத்துவ காரணத்தால், 10ல், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அறை எண்: 7ல் அடைக்கப்பட்டிருந்த தெய்வசிகாமணி, நேற்று காலை, 6:15 மணிக்கு ரத்தவாந்தி எடுத்த நிலையில் சுருண்டு கிடந்தார்.
உடனே அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதனையில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின் பிரேத பரிசோதனைக்கு உடல் பிணவறைக்கு அனுப்பப்பட்டது. விசாரணை கைதி, சிறையில் இறந்ததால், சேலம் குற்றவியல், 3வது நீதிமன்ற நடுவர் தங்ககார்த்திக்கா, மதியம், 12:30 மணிக்கு, மருத்துவமனை பிணவறைக்கு வந்து, பிரேத விசாரணை நடத்தினார். அப்போது கைதிக்கு காயம் உள்ளதா என்பதை பார்வையிட்டார். தொடர்ந்து கைதியின் மனைவி விஜயா, 45, மகன்கள் தீபன்சக்கரவர்த்தி, 25, தீபன்குமார், 20, இரு உறவினர்கள் என, 5 பேரிடம் அடுத்தடுத்து விசாரித்து, வாக்குமூலமாக பதிவு செய்த பின், மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தெய்வசிகாமணி, சாராயம் விற்றது தொடர்பான, 5 வழக்கில் அபராதம் செலுத்தியுள்ளார். இன்னும், 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், எக்ஸ்ரே எடுக்க முடியாததால், உடற்கூறு ஆய்வு நடக்கவில்லை. நாளை(இன்று) உடற்கூறு ஆய்வு நடத்தி, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்' என்றனர்.

