ADDED : ஏப் 25, 2025 01:42 AM
கம்பைநல்லுார்:அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும், என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் வரை, 48 மாதங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். கடந்த மாதம் நடந்த தேர்வில், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த குண்டல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர், 2 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்வில் வெற்றி பெற்ற மாணவியர் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு, மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேசன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் ரெஜினா மேரி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலா, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

