ADDED : பிப் 01, 2025 01:13 AM
பா.ம.க., - எம்.எல்.ஏ., சாடல்
சேலம், :''வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபம் திறப்பதில் என்ன பயன்?'' என பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் நடந்த பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 'முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் இருந்திருந்தால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத்தந்திருப்பார்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியிருந்தார். இதற்கு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 'வன்னியர்களுக்கு அதிக நன்மை செய்தது, தி.மு.க.,' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சேலம், அஸ்தம்பட்டியில், சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள் அளித்த பேட்டி:வன்னியர்களுக்கு அதிக அளவில் துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த, 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்த தியாகிகளின் நோக்கத்தை, ஸ்டாலின் நிறைவேற்றினாரா? வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபம் திறப்பதில் என்ன பயன்?
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த, 21 தியாகிகளுக்கு ஆதரவாக அல்லது ஒதுக்கீடு வேண்டும் என, அமைச்சர் ராஜேந்திரன் கடிதம் எழுதினாரா? மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், வன்னிய மக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டார். அதுபோல் ஆதரவாக செயல்பட, ராஜேந்திரனுக்கு தில்லு, திராணி இருக்கிறதா? வன்னியர் சமூகத்தை சேர்ந்த அவர், அவரது சமுதாயத்துக்கு எந்த நன்மையும்
செய்யாதவர். ஆறுமுகத்தை, பா.ம.க., தலைவர் அன்புமணி புகழ்ந்து பேசியதற்கு, அறிவாலயத்தில் இருந்து கொடுத்த அறிக்கையை, அமைச்சர் ராஜேந்திரன் அப்படியே வெளியிட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. தி.மு.க.,வில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காததால், இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தடை ஏற்பட்டுள்ளது. சமூக நீதி கிடைக்காமல் லட்சக்
கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது பா.ம.க., மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உடனிருந்தார்.