/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்
/
தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 01, 2025 01:46 AM
தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்
ஓமலுார்:சேலம் பெரியார் பல்கலையில், 'அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்' எனும் கருப்பொருளை மையமாக வைத்து, தேசிய அறிவியல் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கிவைத்து, அறிவியல் முக்கியத்துவம், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, அறிவியல் ஆக்கப்பூர்வ தீர்வாக இருப்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து வேலுார் திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முருகன், அறிவியல் தின முன்னோட்டமும் முக்கியத்துவமும், அறிவியல் அறிஞர் ராமன் விளைவு, சந்திரசேகர் விண்வெளி ஆராய்ச்சி, பெண் ஆராய்ச்சியாளர்களின் முக்கியத்துவம் குறித்து குறித்து பேசினார். மாணவ, மாணவியரின் திட்ட வரைவு கண்காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் மாணவ, மாணவியர், அவரவர் செய்முறைகளை விளக்கினர். தேர்வாணையர் விஸ்வநாதமூர்த்தி(பொ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. அறிவியல் இயக்க வட்டார செயலர் புவனா, அறிவியல் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காட்டினார். பனமரத்துப்பட்டி வட்டார அறிவியல் இயக்க கிளை தலைவர் தெய்வநாயகம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கொங்கணாபுரம் அருகே கன்னந்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார், 'அறிவியல் மேதை ராமனின் கண்டுபிடிப்பான, 'வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?' என, அவருக்குள் எழுந்த கேள்விக்கு, நீல நிறத்தின் அதீத ஒளிச்சிதறலே காரணம்' என உலகுக்கு அறிவித்த நாளே, அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது' என்றார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.