/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மார் 14, 2025 02:00 AM
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
பனமரத்துப்பட்டி:மாசி திருவிழாவை ஒட்டி, பனமரத்துப்பட்டி, மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. மதியம் பல்வேறு வகை அலகுகள் குத்தியும், காளியம்மன், மாரியம்மன், காட்டேரி வேடம் அணிந்த பக்தர்கள், மக்களிடம் யாசகம் பெற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் கோவில் வளாகத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனை, வழி நெடுக மக்கள் வரவேற்று வழிபட்டனர். அங்கண்ணன் தெரு, ஈச்சமரம், ரெட்டியார் தெரு வழியே சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
சக்தி செல்லியம்மன்ஆத்துார் அருகே புது கொத்தாம்பாடி சக்திமாரியம்மன், சக்தி செல்லியம்மன், விநாயகர் கோவிலில், தேர் திருவிழாவுக்கு காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன், கடந்த, 4ல் விழா தொடங்கியது.
நேற்று முன்தினம் சக்தி மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. நேற்று சக்தி செல்லியம்மன் தேர் திருவிழா நடந்தது. சுவாமியை தேரில் வைத்து, முக்கிய வீதிகள் வழியே திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
பத்ரகாளியம்மன்மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசி மக திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் சின்னதேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு பெரிய தேரோட்டம் தொடங்கியது.
விநாயகர் தேர் முன்புறம் செல்ல, பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாலை, 6:00 மணிக்கு பெரிய தேர், மேச்சேரி கிராமச்சாவடி அருகே நிறுத்தப்பட்டது.
இன்று மதியம், 3:00 மணிக்கு மீண்டும் தேரை பக்தர்கள் இழுத்து, நிலையத்தில் சேர்ப்பர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, செயல் அலுவலர் சுதா செய்தனர்.
சத்தாபரண ஊர்வலம்ஏற்காடு, ஜெரீனாக்காடு காளியம்மன் கோவிலில் நேற்று சத்தாபரண ஊர்வலம் நடந்தது. காளியம்மன் சிலை வைக்கப்பட்ட சத்தாபரணம், அலங்கார ஏரியில் தொடங்கி, ஏற்காடு டவுன், பஸ் ஸ்டாண்ட், ஜெரீனாக்காடு வழியே ஊர்வலமாக, கோவிலை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில், பக்தர்கள் பலர் காளியம்மன், காட்டேரி வேடமிட்டு, காட்டேரியை, காளியம்மன் விரட்டுவது போன்று சத்தாபரணத்துடன் சென்றனர்.
இன்று திருவிளக்கு பூஜைசேலம், அம்மாபேட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நேற்று அனைத்து தெய்வங்களுக்கும் முத்தங்கி அணிவித்து பூஜை நடந்தது. இன்று ரத்தினங்கி அணிவிக்கப்படவுள்ளது. மாலை ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜை நடக்கிறது.