ADDED : ஜன 22, 2025 01:17 AM
இடைப்பாடி,:மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன நீரை பயன்படுத்தி தேவூர் அருகே சென்றாயனுார், காவேரிபட்டி, கல்வடங்கம், பொன்னம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 3,000 ஏக்கரில், ஆந்திரா பொன்னி, தனிஷ்கா, அம்மன், மகாலட்சுமி, தனலட்சுமி, ஆங்கூர் சாதனா, பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்திருந்தனர்.
அதில், 3 முதல், 5 மாதங்கள் முடிந்த வயல்களில், தற்போது விளைச்சல் அடைந்து, இயந்திரம், கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்றாயனுார் விவசாயி கோபால் கூறியதாவது:ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்தல், பயிர் நடவு, உரமிடுதல், களை எடுத்தல், அறுவடை உள்ளிட்டவை என, 40,000 ரூபாய் வரை செலவாகிறது. நெல் நன்கு விளைந்து மகசூல் தந்தால், ஏக்கருக்கு, 75 கிலோவில், 30 முதல், 40 மூட்டை மகசூல் கிடைக்கும்.
இந்த ஆண்டு, நெல் குருத்துவிடும்போது மழை பெய்ததோடு, நோய் தாக்குதலால் மகசூல் குறைந்தது. இதனால், 17 மூட்டைகள் வீதமே, மகசூல் கிடைத்துள்ளது. வியாபாரிகள், 75 கிலோ மூட்டையை, 1,800 முதல், 2,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.