/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைப்பிரதேசம் போன்று சேலத்தில் பனிமூட்டம்
/
மலைப்பிரதேசம் போன்று சேலத்தில் பனிமூட்டம்
ADDED : பிப் 14, 2025 01:28 AM
மலைப்பிரதேசம் போன்று சேலத்தில் பனிமூட்டம்
சேலம்:சேலத்தில் நேற்று காலை, மலைப்பிரதேசம் போன்று பனிமூட்டம் நிலவியதால், மக்கள் ஆச்சரியப்பட்டனர். பலர், 'செல்பி' எடுத்து ரசித்தனர்.தை மாதத்தில் நடப்பாண்டில் குளிர் அதிகரித்துள்ளது. பகலில் நல்ல வெயில் அடித்து, இரவில் குளிர்கிறது. இதனால் தோல் வறட்சி, சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, மக்கள் ஆளாகின்றனர். சில நாட்களாக, பின் பனிக்காலம் என்பதால், அதிகாலை வேளையில் கடுங்குளிர் நிலவியது. நேற்று காலை, 8:30 மணி வரை, சேலம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி, சாரதா கல்லுாரி சாலை, அழகாபுரம், நகரமலை அடிவாரம், 4, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில், அரை மணி நேரத்துக்கு மேல் பனிமூட்டம் நிலவியது. இதனால், 5 அடி துாரத்தில் உள்ள வாகனங்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மலைப்பிரதேசங்களில் காணப்படும் பனிமூட்ட சூழல், சேலம் நகரில் ஏற்பட்டது.
சங்ககிரி, இடைப்பாடிஅதேபோல் நேற்று அதிகாலை, இடைப்பாடி, சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. குறிப்பாக இடைப்பாடி நகர், புறநகர் பகுதிகள், சங்ககிரி டவுன், புதிய, பழைய இடைப்பாடி சாலைகள், ஈரோடு பிரிவு சாலை, பச்சக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை, 8:00 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சற்று தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், மற்ற வாகன ஓட்டிகள் தடுமாறியபடி மெதுவாக சென்றனர். மேலும் காலையில் பணிக்கு சென்றோரும் சிரமத்துக்கு ஆளாகினர்.