ADDED : மார் 21, 2025 01:44 AM
இன்று மாநில கபடிபோட்டி தொடக்கம்
ஓமலுார்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாளை ஒட்டி, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டம் ஓமலுார் மேற்கு ஒன்றியம் சார்பில் வேலாக்கவுண்டனுாரில் உள்ள எஸ்.எஸ்.கே.ஆர்., மண்டபம் அருகே, மாநில அளவில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டி இன்று மாலை, 4:00 மணிக்கு தொடங்குகிறது.
ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தொடங்கி வைக்கிறார். மாலை, 4:00 முதல், இரவு, 10:00 மணி வரை மின்னொளியில், 3 நாட்கள் நடக்கும் போட்டியில் தமிழகம் முழுதும், 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. நாளை இரவு நடக்க உள்ள போட்டியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பார்வையிடுவார்.
ஆண்கள் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் முறையே, 1 லட்சம், 50,000, 25,000 ரூபாயுடன் சுழற்கோப்பைகள், 4ம் இடத்துக்கும், 25,000 ரூபாய் வழங்கப்படும். பெண்கள் அணிக்கு முறையே, 50,000, 30,000, 15,000 ரூபாயுடன் சுழற்கோப்பைகள், 4ம் பரிசாக, 15,000 ரூபாய் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை, ஓமலுார் மேற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் மேற்கொள்கிறார்.