ADDED : ஆக 26, 2024 02:56 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் இருந்து மாக்கனுார், பாறையூர் வழியே மல்லுார் செல்லும், 3 கி.மீ., சாலை, மல்லுார் டவுன் பஞ்சாயத்து, மாநில நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஆகிய நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.
அதில் மாக்கனுார் முதல் மல்லுார் வரையான சாலை, மக்கள் பயன்படுத்த முடியாதபடி சீரழிந்துள்ளது. ஏற்கனவே மல்லுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், அதன் எல்லை வரை சாலை புதுப்பிக்க, 77 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விட்டுள்ளனர்.
இந்நிலையில் பனமரத்துப்பட்டி ஒன்றியம் பள்ளித்தெருப்பட்டி ஊராட்சியில் உள்ள மாக்கனுார் முதல் பாறையூர் மயானம் வரையான சாலையை புதுப்பிக்க, 47 லட்சம் ரூபாயில் ஒப்பந்தம் விடப்பட்டது. அதற்கு நேற்று, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார், பூமிபூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலர் உமாசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.