சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஏப்., 20ல் நடந்தது. மறுநாள், மண்டல பூஜை தொடங்கியது. தினமும் மூலவர் சுந்தரவல்லி தாயார் மற்றும் அழகிரிநாதருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, கட்டளைதாரர்களால் நடந்தது. வழக்கமாக மண்டல பூஜை, 48 நாட்கள் நடக்கும்.
இக்கோவிலின் முக்கிய திருவிழாவான வைகாசி பிரமோற்சவ தேர் திருவிழா வருவதால், 48 நாட்களுக்கு பதில், பாதியாக குறைத்து, 24 நாட்கள் அரை மண்டலம் மட்டும் பூஜை நடந்தது. அதன் நிறைவாக நேற்று, புனிதநீர் நிரப்பிய நவ கலசங்கள், மலர்களால் அலங்கரித்து பீடத்தில் வைத்து சுதர்சனம், ராமன், கவுதம் பட்டாச்சாரியார்களால், மகா பூர்ணாஹூதி யாகம் நடந்தது. தொடர்ந்து கலசத்தில் இருந்த நீரால், மூலவர் தாயார், அழகிரிநாதர், நுழைவாயில் சுதை சிற்பங்களுக்கு அபி ேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி தலைமையில் குழுவினர், செயல் அலுவலர் அனிதா, பக்த சபை குழுவினர் செய்திருந்தனர்.