/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதுக்கியிருந்த மளிகை பொருட்கள் பறிமுதல் துணை சிறை அலுவலரிடம் விசாரணை
/
பதுக்கியிருந்த மளிகை பொருட்கள் பறிமுதல் துணை சிறை அலுவலரிடம் விசாரணை
பதுக்கியிருந்த மளிகை பொருட்கள் பறிமுதல் துணை சிறை அலுவலரிடம் விசாரணை
பதுக்கியிருந்த மளிகை பொருட்கள் பறிமுதல் துணை சிறை அலுவலரிடம் விசாரணை
ADDED : ஆக 20, 2024 03:22 AM
ஆத்துார்: ஆத்துார் மாவட்ட சிறையில் உள்ள தட்டச்சு அறையில், 23 வகை மளிகை பொருட்கள் பதுக்கி வைத்திருந்து தொடர்பாக, துணை சிறை அலுவலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு, 45 கைதிகள் உள்ளனர். கடந்த, 17ல், சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், சிறைத்துறை விஜிலென்ஸ் போலீசார், திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறையில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின் கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு பட்டியல் குறித்து கேட்டறிந்தனர். சிறை கைதிகளிடம், பாதுகாப்பு வசதி, குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தட்டச்சு அறையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 23 வகை மளிகை பொருட்கள் தனியாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்து, சிறை உணவு பொருள் கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து, துணை சிறை அலுவலர் வைஜெயந்தி, பணிபுரியும் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத் கூறுகையில், ''ஆத்துார் மாவட்ட சிறையில் ஆய்வு செய்தபோது, தட்டச்சு அறையில் மறைத்து வைத்திருந்த, 23 வகை பொருட்கள் பறிமுதல் செய்து, கிடங்கில் ஒப்படைத்துள்ளோம். உணவு பொருள் பாதுகாப்பிற்கு, துணை சிறை அலுவலர் தான் பொறுப்பு என்பதால், பறிமுதல் செய்த பொருட்கள் குறித்து, துணை சிறை அலுவலர் வைஜெயந்தியிடம் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக, சென்னை தலைமை அலுவலகத்திற்கு, துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.