/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
14 பாரம்பரிய ரக நெற்பயிர்: சோதனை முயற்சி வெற்றி
/
14 பாரம்பரிய ரக நெற்பயிர்: சோதனை முயற்சி வெற்றி
ADDED : மே 11, 2024 07:10 AM
ஓமலுார் : அரசு விதைப்பண்ணையில், 20 பாரம்பரிய நெல் ரகங்கள் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டதில், 14 ரகங்கள் நன்கு வளர்ந்துள்ளன.
வேளாண் துறை சார்பில் தமிழகம் முழுதும் உள்ள அரசு விதைப்பண்ணைகளில், 20 வகை பாரம்பரிய நெல் ரகங்களை, சோதனை விளக்க திடல் அமைத்து பயிரிட விதைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு விதைப்பண்ணையில், 20 ரக விதைகள் நாற்றங்கால் விடப்பட்டன.
இதுகுறித்து அதன் மேலாளர் தனசேகரன் கூறியதாவது:
தமிழக பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க, பண்ணையில், 20 ரக விதைகள் நாற்றங்கால் விடப்பட்டன. அவற்றில் நடவு செய்த, 135 நாளில் விளைச்சல் தரக்கூடிய, 'மாப்பிள்ளை சம்பா நாற்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.
அதேபோல் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும், மருத்துவ குணம் கொண்ட, 110 நாட்களில் விளைச்சல் தரும் ரத்தசாலி; நீரிழிவு நோய் குணமாக்க கூடிய, 7 அடி உயரம் வளரக்கூடிய, 150 நாட்கள் வாழ்நாள் காலம் கொண்ட காட்டு யானம்; கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சி, உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும், 70 முதல், 90 நாட்கள் வளரக்கூடிய பூங்கார்; ஜீரண பிரச்னைகளை சரிசெய்யும், 120 நாட்களில் பலன் தரக்கூடிய மைசூர் மல்லி; சிறுபிள்ளைகளுக்கு சளித்தொல்லையை நீக்கக்கூடிய, 140 நாட்களில் வளரும் நவரா; உடல் தசை, எலும்பு வலுபெற உதவும், 150 நாட்களில் வளரக்கூடிய தங்கச்சம்பா ஆகியவையும் வளர்ந்துள்ளன.
மேலும் சிறு, பெருங்குடல், மார்பக புற்றுநோயில் இருந்தும், இருதயம் தொடர்பான நோயிலிருந்து காக்கும், 125 நாட்களில் பலன் தரும் சீரக சம்பா; நீரிழிவு, பித்தத்தால் ஏற்படக்கூடிய வாந்தியை நிறுத்தும், 110 நாட்களில் பலன் தரக்கூடிய துாயமல்லி; மூளை செயல்பாட்டை அதிகரிக்க, வீக்கத்தை குறைக்கும், 150 நாட்களுக்குள் வளரக்கூடிய கருப்பு கவுனி; ரசாயனம், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் ஒரே அரிசி வகையான, 130 நாட்களில் வளரக்கூடிய இந்திராணி; குறைந்த மாவுச்சத்து கொண்ட, சிரமமின்றி ஜீரணிக்கக்கூடிய, 140 நாட்கள் வாழ்நாள் கொண்ட சோனா மசூரி; இருதய நலன் காக்க, நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும், 120 நாட்களில் வளரும் நெய் கிச்சடி; இருதயத்துக்கு ஆரோக்கிய உணவாக அமையும், 110 நாட்களில் வளரும் அறுபதாம் குறுவை என, 14 ரக நாற்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.
இந்த, 14 ரக பயிர்கள் பூக்கும் பருவத்தை கடந்து கதிர்கள் முளைத்து வருகின்றன. ஜூன், 10க்கு பின் அறுவடைக்கு தயாராகிவிடும். விவசாயிகள் வழக்கமாக பயிரிடுவதற்கு என்ன செலவு ஆகுமோ, அதே செலவுதான் பாரம்பரிய நெல்லுக்கும். அதேநேரம் அதிக விலைக்கு விற்பனையாவதால் இரட்டிப்பு லாபம் பெறமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.