/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலைகளில் 1,500 விநாயகர் சிலைகள் கரைப்பு
/
நீர்நிலைகளில் 1,500 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 09, 2024 07:17 AM
சேலம், மேட்டூர், கல்வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட நீர்நிலைகளில் நேற்று, 1,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் இருந்து சிலைகளை, பக்தர்கள், லாரி, வேன்களில் மேட்டூர் கொண்டு வந்தனர். அந்த வாகனங்களை, ஒர்க்ஷாப் கார்னர் பிரிவு அருகே பவானி நெடுஞ்சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் வாகனங்களில் இருந்து சிலைகளை இறக்கிய பக்தர்கள், காவிரி பாலம் வரை எடுத்து சென்றனர். அங்கு அசம்பாவிதத்தை தடுக்க மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ணியில் ஈடுபட்டனர்.
படித்துறையில் இருந்து காவிரியாற்றுக்கு சிலைகளை எடுத்துச்செல்ல அதன் அளவை பொறுத்து, 4 முதல், 8 பக்தர்கள் மட்டும் நீரில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். சிறிது துாரம் சென்றதும் அங்கு பைபர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்ட தீயணைப்பு குழுவினர், சிலைகளை வாங்கி ஆற்றின் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று கரைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மேட்டூர் காவிரியாற்றில் மட்டம் பகுதிக்கு சென்று அங்கு உறவினர்கள்,நண்பர்களுடன் நீராடினர்.
அதன்படி மேட்டூர் காவிரி பாலம் அடிவார படித்துறையில், 200, எம்.ஜி.ஆர்., பாலம் அடிவார படித்துறையில், 140, மேட்டூர் அணை சென்றாய பெருமாள் கோவில் எதிரே, 22, கருமலைக்கூடல் அடுத்த திப்பம்பட்டியில், 80, மேச்சேரி, கூனாண்டியூரில், 138 என, 580 சிலைகள் நேற்று நீரில் கரைக்கப்பட்டன.
அதேபோல் பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆறுகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, 727 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மேலும் டேனிஷ்பேட்டை ஏரியில், 50 சிலைகள், சேலம் மூக்கனேரியில், 200 சிலைகள் கரைக்கப்பட்டன.