/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8 மணி நேர சோதனையில் 3 ஆம்னி பஸ் பறிமுதல்
/
8 மணி நேர சோதனையில் 3 ஆம்னி பஸ் பறிமுதல்
ADDED : செப் 15, 2024 04:05 AM
ஓசூர்: கிருஷ்ணகிரியில் அதிகாரிகள் குழு நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி மற்றும் வரி செலுத்தாத மூன்று ஆம்னி பஸ்கள் சிக்கின. இதில்லாமல், 35க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு அபராதம், வரி விதிக்கப்பட்டது.
சென்னை போக்குவரத்து இணை ஆணையர் (செயலாக்கம்) சுரேஷ் தலைமையில், ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை ஆம்னி பஸ்களுக்கான சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் வரி கட்டாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கப்பட்ட, 41 ஆம்னி பஸ்களுக்கு, 1.10 லட்சம் ரூபாய் அபராதம், 2.48 லட்சம் ரூபாய் வரி விதித்தனர்.
பெங்களூருவில் இருந்து கோட்டயம் சென்ற, இரண்டு ஸ்ரீ விநாயகா சொகுசு ஆம்னி பஸ்கள், தகுதி சான்று, தமிழகத்தில் இயக்குவதற்கான அனுமதி, வரி கட்டாமல் இருப்பது தெரிந்தது. இரு ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையறிந்து வந்த ஆம்னி பஸ் உரிமையாளரான, பெங்களூரு கிரிஸ்குமார், மேலாளர் முருகன், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இருவர் மீதும் ஓசூர் டவுன் போலீசில் புகார் தரப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்டார் லிங்க் தனியார் பஸ், அனுமதியின்றி சென்றதால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்டப்ட மூன்று ஆம்னி பஸ்களும், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.