/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 13, 2025 01:17 AM
ரூ.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
வீரபாண்டி:வீரபாண்டி ஒன்றியம் புத்துார் அக்ரஹாரத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
பஸ், கால்நடை மருந்தகம், மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மக்கள், பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குறிப்பாக கொண்டலாம்பட்டி - புத்துார் சாலையில் ரயில்வே தண்டவாள பகுதியில் புதிதாக சுரங்கப்பாலம் அமைத்தல்; துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தல்; மயான நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாமில் புது ரேஷன் கார்டுகள், வேளாண், தோட்டக்கலை, சமூக பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலன், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில், 89 பயனாளிகளுக்கு, 56.49 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ., அபிநயா, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா, மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன் உள்பட, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கலெக்டர் காரை மறித்த பெண்கள்இந்த விழாவுக்கு, கலெக்டர் பிருந்தாதேவி காலை, 11:30 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். முகாம் நடக்கும் மண்டபம் அருகே, பெரியார் நகரை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் காரை மறித்து, 'எங்கள் குறைகளை கேளுங்கள்' என கூறினர். தொடர்ந்து காரை விட்டு கலெக்டர் இறங்கினார். உடனே பெண்கள், 'இந்த ஊராட்சியில் மற்ற பகுதிகளுக்கு கிடைக்கும் எந்த வசதிகளும், பெரியார் நகர் மக்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு தனி கழிப்பிடம் வேண்டும். தெருவிளக்கு, குடிநீர், நுாலகம், ஆரம்ப சுகாதார நிலையம், மேலும் எங்களுக்கு ஒதுக்கிய மயான இடத்தை ஆக்கிரமித்துவிட்டனர்' என புகார்களை அடுக்கின்றனர்.
அதற்கு கலெக்டர், 'உரிய அதிகாரிகளை அனுப்பி உங்கள் குறைகள் சரிசெய்யப்படும்' என உறுதி அளித்தார். இதனால் பெண்கள் கலைந்து
சென்றனர்.