/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவலுாரில் 7 மணி நேரம் கொட்டிய கனமழைபாரியூர் கோவில் குண்டம் தண்ணீரில் மூழ்கியது
/
சிறுவலுாரில் 7 மணி நேரம் கொட்டிய கனமழைபாரியூர் கோவில் குண்டம் தண்ணீரில் மூழ்கியது
சிறுவலுாரில் 7 மணி நேரம் கொட்டிய கனமழைபாரியூர் கோவில் குண்டம் தண்ணீரில் மூழ்கியது
சிறுவலுாரில் 7 மணி நேரம் கொட்டிய கனமழைபாரியூர் கோவில் குண்டம் தண்ணீரில் மூழ்கியது
ADDED : ஏப் 06, 2025 01:47 AM
சிறுவலுாரில் 7 மணி நேரம் கொட்டிய கனமழைபாரியூர் கோவில் குண்டம் தண்ணீரில் மூழ்கியது
கோபி:கோபி தாலுகா, சிறுவலுார், பதிப்பாளையம், ஆயிபாளையம், கவுண்டம்பாளையம், எலந்தைக்காடு, சிட்டாசாலை, மணியக்காரன்புதுார், நட்டுவாக்காடு உள்ளிட்ட பகுதியில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணி முதல், நேற்று அதிகாலை 4:30 மணி வரை, விடிய விடிய பலத்த இடியுடன் கன மழை பெய்தது.
ஏழு மணி நேரம் தொடர்ந்து பெய்ததால், 230 மி.மீ., மழை சிறுவலுாரில் பதிவாகியுள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கோபி, கொளப்பலுார், வேட்டைக்காரன்கோவில், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம், நாதிநாளையம், நாகர்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட பகுதியில், கொட்டிய மழையால், நாகதேவம்பாளையம் பஞ்., வெள்ளியங்காட்டுப்புதுார் காலனியில், 16 வீடுகளுக்குள் நள்ளிரவில் மழைநீர் புகுந்தது.
கூகலுார் கிளை வாய்க்காலில் பாசன நீருடன், மழைநீரும் கலந்ததால், நஞ்சை கோபி என்ற இடத்தில் வாய்க்காலின் இரு கரையும் மூழ்கியது. கோபியில் நேற்று பெய்த மழையால், கீரிப்பள்ள ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் பாசனத்துக்கு திறந்த தண்ணீருடன், மழைநீரும் சேர்ந்ததால், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே செல்லும் தடப்பள்ளி வாய்க்காலின் இரு கரையும் மூழ்கியது. அங்கு வாய்க்கால் பாலம் அருகே கோவிலுக்கு சொந்தமான அன்னதான மண்டபத்தை மழைநீர் சூழ்ந்தது.
வாய்க்காலில் பெருக்கெடுத்த மழைநீரால், கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகத்தில், வன்னிமர விநாயகர் கோவில் அருகே இருந்த, 50 ஆண்டு பழமையான புங்கமரம் வேருடன் சாய்ந்து, தடப்பள்ளி வாய்க்கால் குறுக்கே விழுந்தது. இதனால் கோவில் படித்துறை சேதமடைந்தது. மரத்தின் மற்றொரு பகுதி வாய்க்கால் கரையை தாண்டி கிடந்தது.
தண்ணீர் நிறுத்தம்
இதனால் வாய்க்கால் கரையோரம் உள்ள வழித்தடம் வழியாக, பாசனம் சார்ந்த வேலைக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் நேற்று அவதியுற்றனர். பாரியூர் பகுதியில் விடிய விடிய பெய்த பலத்த மழையால், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி நீள குண்டம் மழைநீரில் மூழ்கியது. பலத்த மழை எதிரொலியாக, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில், நேற்று காலை பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கவுந்தப்பாடி, சலங்கபாளையம், ஆப்பக்கூடல் சாலை, கவுந்தப்பாடிபுதுார் உள்ளிட்ட பகுதியில், 91.40 மி.மீ., மழை பெய்தது. பலத்த மழையால் கோபியில் பல இடங்களில், இரவு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அவதியுற்றனர்.
சென்னிமலை பகுதியில்
நிரம்பிய குட்டைகள்
சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1130 மணிக்கு மேல் தொடங்கிய கனமழை, ௨ மணி நேரம் கொட்டி தீர்த்தது. சிறுக்களஞ்சி, பாலதொழுவு, கூத்தம்பாளையம், வரப்பாளையம் , வாய்ப்பாடி ஊராட்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் சிறுக்களஞ்சி ஊராட்சி சீரங்கம்பாளையம் குட்டை நேற்று நிரம்பி, உபரி நீர் வெளியேறி சின்னகாட்டுப்பாளையம் குட்டை நிரம்பியது. அங்கிருந்து பாலதொழுவு குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. கடந்த, ௧௦ ஆண்டுகளில் இப்படி ஒரு மழை பெய்ததில்லை என்று, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கடம்பூரில் கனமழை
கடம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று மதியம் கரளியம், கானக்குந்துார், அத்தியூர், எக்கத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம், 2:30 மணிமுதல், 4:00 மணி வரை மழை கொட்டியது. இதனால் எக்கத்துார் பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் தாளவாடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை கொட்டிய நிலையில், நேற்று மதியமும் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குளம், குட்டை நிரம்பியது.