/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., வார்டுக்கு நிதி ஒதுக்கக்கூடாது தி.மு.க., கவுன்சிலர் பேச்சால் சலசலப்பு
/
அ.தி.மு.க., வார்டுக்கு நிதி ஒதுக்கக்கூடாது தி.மு.க., கவுன்சிலர் பேச்சால் சலசலப்பு
அ.தி.மு.க., வார்டுக்கு நிதி ஒதுக்கக்கூடாது தி.மு.க., கவுன்சிலர் பேச்சால் சலசலப்பு
அ.தி.மு.க., வார்டுக்கு நிதி ஒதுக்கக்கூடாது தி.மு.க., கவுன்சிலர் பேச்சால் சலசலப்பு
ADDED : ஜன 01, 2026 04:57 AM
ஆத்துார்: ''அ.தி.மு.க., கூட்டங்களில், முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசுகின்றனர். இனி, அ.தி.மு.க., வார்டுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது,'' என, தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல் பேசியது, அ.தி.மு.க.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர் கலைச்செல்வி: 21வது வார்டில் சாலை அமைத்தல், குடிநீர் குழாய் சீரமைப்பு, சாக்கடை சீரமைப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் பலனில்லை.
கமிஷனர் சையது முஸ்தபா கமால்: கான்கிரீட் சாலைக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் சீரமைக்கப்படும்.
தொடர்ந்து, அ.தி.மு.க., குழு தலைவி உமாசங்கரி தலைமையில் கவுன்சிலர்கள் ராஜேஷ்குமார், மணி, கலைச்செல்வி ஆகியோர், 'அ.தி.மு.க., வார்டுகளில் அடிப்படை பணிகளை கூட மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதால் வெளிநடப்பு செய்கிறோம்' என கூறி வெளியேறினர்.
தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல்: அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதிகளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொய் தகவலை கூறுகின்றனர். அ.தி.மு.க., கூட்டங்களில், முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசுகின்றனர். இனி, அ.தி.மு.க., வார்டுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது. அந்த நிதியை, தி.மு.க., அதன் கூட்டணி கட்சி வார்டுகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தங்கவேலின் பேச்சு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
'மக்கள் தேர்ந்தெடுத்தனர்'
அ.தி.மு.க., குழு தலைவி உமாசங்கரி கூறுகையில், ''அ.தி.மு.க., வார்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது என பேசுவது முறையாகாது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சி பிரதிநிதியாக தேர்வு செய்யப்படவில்லை. வார்டு மக்கள் ஓட்டுப்போட்டுதான் தேர்ந்தெடுத்தனர். தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இப்படி பேசுவது சரியானது இல்லை,'' என்றார்.

