/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடை கால பயிர்கள் :விவசாயிகளுக்கு அறிவுரை
/
கோடை கால பயிர்கள் :விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மார் 22, 2024 01:47 AM
வீரபாண்டி;வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:
கோடைகால பயிர்கள், வறட்சியை தாங்கி வளர, டி.ஏ.பி., 2 சதவீதம், பொட்டாசியம் குளோரைடு கரைசலை, 1 சதவீதம் கலந்து பூ பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 'கயோலின்' கரைசலை வறட்சி காலங்களில் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.
கரும்பு மற்றும் சோள பயிர்களின் சோகைகளை நிலப்போர்வையாக போட்டு வைப்பதால் நிலத்தில் ஈரப்பதம் நிலைத்திருக்கும். பருத்தி பயிருக்கு விதைத்த, 45 முதல், 60 நாட்கள் கழித்து, 'நைட்ரஜன்' உரம், உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் விதைகளை கடினப்படுத்த, 4.5 லிட்டர் தண்ணீரில், 'என்.ஏ.ஏ.,' 40 பி.பி.எம்., (பிளானோபின்ஸ் 4 மில்லி) கலந்து விதைகளை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். பருத்தி பயிரில், 15 முதல், 20 கணுப்பகுதிக்கு மேல் உள்ள பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் நீராவி போக்கை தடுக்க முடியும். அனைத்து வறட்சி கால பயிர்களுக்கும், 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.3 சதவீதம் போரிக் அமிலம், 0.5 சதவீதம் இரும்பு சல்பேட், 1 சதவீதம் யூரியா ஆகியவை கலந்த கரைசலை தெளித்து அதிக மகசூல் பெற முடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம்.

