/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அக்னி வெயில்' தொடக்கம்: ஏற்காடு, மேட்டூரில் மழை
/
'அக்னி வெயில்' தொடக்கம்: ஏற்காடு, மேட்டூரில் மழை
ADDED : மே 05, 2024 01:47 AM
சேலம்:'அக்னி நட்சத்திரம்' எனும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. ஆனால் சேலத்தில் வெயில் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. குறிப்பாக கடந்த, 1ல், 106.7 டிகிரி பாரன்ஹீட், 2ல், 108 ஆக உயர்ந்த வெப்பம், நேற்று முன்தினம், 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்த நிலையில் நேற்று, 104.9 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்திருந்தது. இதனால் மக்கள், சற்று நிம்மதி அடைந்தனர். மதியம், 4 ரோடு உள்ளிட்ட சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வானமும் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் சற்று அதிகம் இருந்தது. ஆனால் மதியம், 1:10க்கு இடியுடன் கூடிய மழை தொடங்கி, 2:40 வரை கொட்டி தீர்த்தது. சுற்றுலா பயணியர், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் கருமந்துறை, கல்வராயன் மலைப்பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மதியம் 2:00 மணிக்கு தொடங்கி, ஒரு மணி நேரம் மழை பெய்தது. அதேபோல் சேலம் அடுத்த குப்பனுார், வலசையூர், சுக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மதியம் மழை பெய்தது.
டிசம்பருக்கு பின் மழை
மேட்டூர் தாலுகா கொளத்துார் வட்டாரத்தில் கடைசியாக கடந்த டிச., 7ல், 7.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கடந்த, 12ல் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசான மழை மட்டும் பெய்தது. டிசம்பருக்கு பின் நேற்று மாலை, 4:30 மணிக்கு மேட்டூர் சுற்றுப்பகுதியில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை, அரை மணி நேரம் கொட்டியது.
வாழை மரங்கள் சேதம்
கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் ஆண்டுதோறும் ஒரு லட்சம் வாழைகளுக்கு மேல் சாகுபடி செய்வர். நடப்பாண்டு வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் விவசாயிகள் வாழை சாகுபடி பரப்பை குறைத்துக்கொண்டனர். பல விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொண்டனர். 3 மாதங்களுக்கு பின் நேற்று கொளத்துார் சுற்றுப்பகுதியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. நீதிபுரம், லக்கம்பட்டி, காரைக்காடு, கண்ணாமூச்சி பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த, 1,000க்கும் மேற்பட்ட வாழைகளின் தண்டு பகுதி பலத்த காற்றால் முறிந்து சேதமாகின. இது விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.