ADDED : ஆக 02, 2024 01:41 AM
சேலம், சேலம் அருகே ஏலியன் சித்தர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
சேலம், மல்லமூப்பம்பட்டி வழியில் மூலக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராமகவுண்டனுாரில் ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலை அதே பகுதியை சேர்ந்த சித்தர் பாக்யா என்ற லோகநாதன், 45, முக்கால் ஏக்கர் நிலத்தில் நிறுவியுள்ளார். சிவலிங்கத்தில் இருந்து பூமிக்கு அடியில், 11 அடி ஆழத்தில், அவரது குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் நித்ய பூஜை செய்தாலும் லிங்கம், சித்தர், முனிவருக்கு தேய்பிறை, வளர்பிறை பஞ்சமி திதியில், மாலை, 6:00 மணிக்கு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து லோகநாதன் கூறியதாவது:
வேறு எங்கும் இல்லாதபடி சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் தெய்வங்கள் ஒருங்கிணைந்த லிங்கமாக நிறுவப்பட்டுள்ளது. சிவன் இரட்டை ஆருடை லிங்கமாக காட்சி தருகிறார். என் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் நிறுவப்பட்டன. இதுவரை ஏலியன் சித்தர் எங்கும் கிடையாது. இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது.
இக்கோவிலில் நான்முக முருகன், ஐந்து முக காளி, தாமரை மலர் பலிபீடம், கருங்கற்களால் இரட்டை கொடிமரம் நிறுவப்பட்டுள்ளன. ஜடாமுனி, காமதேனு, காலபைரவர், ராமர், மதுரை மீனாட்சி, நந்தி ஆகியவை நிறுவப்பட்டு வருகின்றன. 2021 டிசம்பர் முதல், கோவில் பணி நடக்கின்றன. திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும். தற்போது பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பணி நடந்து வருவதால் குறைந்த அளவே பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு பின் அனைத்து வித பூஜை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.