ADDED : மே 21, 2024 11:58 AM
வாழப்பாடி: வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், கருமந்துறை, ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பரவலாக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தினசரி தனியார் வாழை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில், வாழை வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து வாழை வியாபாரிகள் கூறியதாவது: வாழப்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக, பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை மரங்கள் சாய்ந்து, வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம், 500 முதல் 600 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்த நிலையில், நேற்று, 900 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தது.
அதேபோல் கடந்த வாரம் ரகத்தை பொறுத்து வாழைத்தார், 400 முதல், 800 ரூபாய் வரை விற்பனையானது. அதிகளவில் வாழைத்தார் விற்பனைக்கு குவிவதால், நேற்று, 200 முதல் 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. இவ்வாறு கூறினர்.

