ADDED : ஏப் 25, 2024 05:02 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் பிரிவில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அங்கு பிரதான சாலையின் கிழக்கு பகுதியில் பள்ளம் தோண்டி சாலை, பாலம் அமைக்கப்படுகிறது. அம்மாபாளையம் ஏரி அருகே பனமரத்துப்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் இணைகின்றன. அங்கிருந்து சிறிது துாரம் செல்லும் வாகனங்கள், மல்லுார் பிரிவு சாலையில் நுழைகின்றன.
பனமரத்துப்பட்டி சாலையில் இருந்து மல்லுார் பிரிவு வரை, நெடுஞ்சாலை மற்றும் புதிதாக அமைக்கப்படும் சர்வீஸ் சாலைக்கு தோண்டப்பட்ட பள்ளத்துக்கும் நடுவே தடுப்பு இல்லை. நெடுஞ்சாலையோரம் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் போதிய இடமில்லை.
நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் பனமரத்துப்பட்டி சாலை இணையும் பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இரவில் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை, சாலையோரத்தில் தடுப்பு வேலி அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

